×

கோவையை தொடர்ந்து திருப்பூரில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி!: அச்சத்தில் மக்கள்..!!

திருப்பூர்: திருப்பூரில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அடுத்த சோலிபாளையம் பகுதியை சேர்ந்த 44 வயது ஆண் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அந்த நபர் அவதிப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக 2 தினங்களுக்கு முன்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று காய்ச்சல் தொடர்பான ரத்த பரிசோதனை செய்துள்ளார்.

பரிசோதனையின் முடிவில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. தற்போது அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 10 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட உபாதைகள் இருந்தால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறும் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது திருப்பூரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Tags : Tiruppur, swine flu, people
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய...